பிரதமர் மோடி இன்று (05.11.2021) காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம், உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். அங்கு சென்ற அவரை டேராடூனில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஆளுநர் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலுக்குச் சென்ற மோடி வழிபாடு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு ஆதி சங்கராச்சார்யா சிலையை இன்று திறந்துவைக்கிறார். மேலும், சங்கராச்சார்யாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் திறந்துவைக்கிறார். அதேபோல், ரூ. 308 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் துவக்கிவைத்து சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
முன்னதாக மோடி இந்தப் பயணத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “ஆன்மீகம் சார்ந்த இந்த பயணம் என்பது, என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நான் கேதார்நாத் சென்று வழிபடுவது வழக்கம்” என்று தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலம் மிகப் பெரிய சேதத்தை சந்தித்தது. அப்போது, ஆதி சங்கராச்சார்யாவின் நினைவிடமும் சேதமடைந்தது. அதன் பிறகு அவரது நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. அதனையே தற்போது மோடி திறந்து வைக்கிறார்.