குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை. ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது. விவாதம், கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத அடிப்படைகள். ஆனால், அவை ஒருபோதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும், இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையிலும் கூடிய நெறிமுறைகளுடன் அமைய வேண்டும். இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் இதனை ஆதரித்தனர்.
இந்த சட்டம் இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த சட்டம் எந்த மதத்தின் இந்திய குடிமகனையும் பாதிக்காது என்று எனது சக இந்தியர்களுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த சட்டம் குறித்து எந்த இந்தியருக்கும் கவலைப்பட தேவையில்லை. அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது. எந்தவிதமான வதந்திகள் மற்றும் பொய்களை நம்பாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவருக்குமான எனது வேண்டுகோள்" என தெரிவித்துள்ளார்.