Skip to main content

சாதுக்களுக்கு பிரதமர் செய்த ஃபோன் கால்... கும்பமேளா நடத்துவதில் ஏற்பட்டுள்ள குழப்பம்...

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

modi talks to sadhus in hospital on phone

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தொடங்கியது. வரும் 30 ஆம் தேதி வரை இது நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கும்பமேளா காரணமாக இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. 

 

மேலும், கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலருக்கு அறிகுறிகள் இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சமும் அம்மாநிலத்தில் நிலவிவருகிறது. இந்நிலையில், கும்பமேளாவை நடத்தும் அகாதாக்களின் அமைப்பான மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனாவால் பாதிக்கப்பட்டுக் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் அகாதாக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா மற்றும் ஆனந்த் அகாதா ஆகியவை இன்றுடன் (ஏப்ரல் 17) கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்தன. 

 

ஆனால், பைராகி, திகம்பர், நிர்வாணி மற்றும் நிர்மோஹி ஆகிய அகாதாக்கள் இந்த இரு அகாதாக்களின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், கும்பமேளாவை முடிப்பது குறித்து முடிவு செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளன. கும்பமேளாவை நடத்தும் குழுக்களுக்கு மத்தியில் இப்படி குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், இதில் தலையிட அம்மாநில அரசும் மறுப்பு தெரிவித்துவிட்ட சூழலில், கும்பமேளா நடத்துவதில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும், ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரி, ஆச்சார்யா மஹாமண்டலேஸ்வர் ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி இன்று உடல் நலம் விசாரித்தார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நான் இன்று ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரியுடன் தொலைப்பேசியில் பேசி அவரின் உடல்நலத்தையும், கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மற்ற சாதுக்களின் உடல்நலன் குறித்தும் விசாரித்தேன். உள்ளாட்சி நிர்வாகத்துக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அனைத்து சாதுக்களும் அளித்து வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

 

இரு சஹி புனித நீராடல்கள் நடக்க உள்ளன. கரோனாவுக்கு எதிராகத் தேசம் நடத்திவரும் போரில், அடையாளமாகக் கும்பமேளா இருக்க வேண்டும். இந்த போருக்கு ஊக்கம் தருவதாகக் கும்பமேளா இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரியின் கருத்தில், "பிரதமர் மோடி என்னிடம் பேசினார். அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் உயிரைக் காப்பது புனிதமானது. கும்பமேளாவுக்கு வரும் 27ம் தேதி சஹி புனித நீராடலுக்கு மக்கள் யாரும் கூட்டமாக வர வேண்டாம்" எனக் கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்