இந்தியாவின் மருந்தியல் தொழில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஒரு சொத்து என்பதை இந்த தொற்றுநோய் எடுத்துக்காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குளோபல் வீக் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இந்தக் காலகட்டத்தில் மறுமலர்ச்சி பற்றிப் பேசுவது இயற்கையானது. உலகளாவிய மறுமலர்ச்சியையும் இந்தியாவையும் இணைப்பது இயற்கையானது. ஏனெனில் உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும், இந்தியாவின் திறமை மற்றும் சக்தியின் பங்களிப்பை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இந்தியத் தொழில்நுட்பத் துறையையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் யாரால் மறக்க முடியும். அவர்கள் பல தசாப்தங்களாக உலகுக்கு வழி காட்டி வருகின்றனர்.
இந்தியர்கள் இயற்கையாகவே சீர்திருத்தவாதிகள். சமூகம் அல்லது பொருளாதாரம் என ஒவ்வொரு சவாலையும் இந்தியா வென்றுள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது. ஒருபுறம் இந்தியா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக வலுவான போரில் ஈடுபட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் போதும், பொருளாதாரத்தின் ஆரோக்கியத்திலும் நாம் சமமாகக் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில், பொருளாதார மீட்சியின் பச்சைத் தளிர்களை நாம் ஏற்கனவே காண ஆரம்பித்திவிட்டோம் என்பதில் ஆச்சரியமில்லை.
இந்தியாவின் மருந்தியல் தொழில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஒரு சொத்து என்பதை இந்த தொற்றுநோய் மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. உலக நாடுகளுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு ஏற்றாற்போல மருந்துகளின் விலையைக் குறைப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.