கரோனா காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று காணொளிக்காட்சி மூலமாக நடைபெற்றது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த மாநாடு கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காணொளிக்காட்சி மூலம் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதேபோல உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செலாவணி நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
கரோனா வைரஸுக்கு தேவையான மருந்துகளை சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. இந்திய மருந்து நிறுவனங்களின் உற்பத்தி திறனை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. மனித குலத்தின் நன்மைக்காக கரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வழங்கும். இந்த கரோனா காலகட்டத்தில் 'சுயசார்பு இந்தியா' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். பிரிக்ஸ் நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உலகின் மிகப்பெரிய பிரச்சனையாகத் தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.