உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அதேபோல், உத்தரப்பிரதேச அரசும் இந்த வன்முறை குறித்து விசாரிக்க தனி நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவும் அவருடைய ஆதரவாளர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தையான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் கோரி, 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று (18.10.2021) காலை 10 மணியளவில் இந்த ரயில் மறியல் போராட்டம் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டம் மாலை 4 மணிவரை நீடிக்கவுள்ளது.
இதற்கிடையே விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து, ஹரியானா மாநிலம் சோனிபட் ரயில் நிலையத்தில், விரைவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாவட்டம் லக்னோவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லக்னோவில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என தெரிவித்துள்ள லக்னோ காவல்துறை, இந்த விதியை மீறுபவர்கள் மீதும், இயல்புநிலைக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.