கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் சர்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதே போல ஒரு கருத்தை காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுகளுக்கான பிரிவின் தலைவரான சாம் பெட்ரோடா ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர், "சர்வதேச செய்தித்தாள்களை படிக்கும் போது பால்கோட் தாக்குதல் நடந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. தாக்குதல் உண்மை என்றால் பிரதமர் அதற்கான ஆதாரங்களை வெளியிடட்டுமே" என கூறினார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்தை மீண்டும், மீண்டும் அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறது என்றும், எதிர்க்கட்சிகளின் இந்த கருத்துக்கள் குறித்து நாட்டு மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.