தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடப் போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திர மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா மாநில முதல்வராக டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவும் பதவியில் உள்ளனர். இந்நிலையில் 17 மக்களவை தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுவது சந்தேகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் கட்சி குறைந்த தொகுதிகளிலேயே வென்றது. எனவே தற்போது உள்ள நிலைப்படி தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என அறிவித்தால் கட்சி ஆரம்பித்த 37 ஆண்டுகால வரலாற்றில் அந்த கட்சி போட்டியிடாத முதல் மக்களவை தேர்தல் இதுவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.