நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் குடும்பமும், அதிகாரமும்தான் முக்கியம் என்று குற்றம்சாட்டினர். தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி அமைந்தால் ராமர் மீண்டும் குடிசைக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள்.
புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் எங்கு பயன்படுத்த கூடாது என்று காங்கிரஸும், சமாஜ்வாதியும் யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.