ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன். இந்த துயரமான சூழலில் உதவியவர்களுக்கு நன்றி. இந்த விபத்து பெரும் மன வேதனை தருகிறது. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்'' என்றார்.