மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். இவர் புனேவில் நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக தேசபக்தி நிறைந்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்லவென்றும், ஸ்லீப்பர் செல்களாக வேலை செய்பவர்களை மட்டுமே பாஜக எதிர்க்கிறது,” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நரேந்திர மோடி நிறைய பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அவர் அப்துல் கலாமை ஜனாதிபதியாகவும் ஆக்கினார். அப்துல் கலாம் ஒரு முஸ்லிம் என்பதால் அவர் ஜனாதிபதியாக ஆக்கப்படவில்லை. ஆனால் அவர் ஒரு திறமையான விஞ்ஞானி என்பதால் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டார்.” எனத் தெரிவித்தார்.
சந்திரகாந்த் பாட்டீலின் பேச்சு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவியேற்றபோது, வாஜ்பாய் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ், “அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அப்துல் கலாமை பரிந்துரைத்தபோது, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு கலாம் ஜனாதிபதியானார்” எனக் கூறியுள்ளது.