தெலுங்கானா மாநிலம் சஹீராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். அவர், சஹீராபாத், கம்மாரெட்டி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் சோதனை நடத்தினார்.
அப்போது அங்கிருந்த கம்மாரெட்டி மாவட்ட ஆட்சியரிடம், “மக்கள் வாங்கும் ஒரு கிலோ அரிசிக்கு மத்திய அரசு எவ்வளவு பணம் தருகிறது? மாநில அரசு எவ்வளவு பணம் தருகிறது? மக்கள் எவ்வளவு கொடுத்து அதை வாங்குகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார். அமைச்சரின் திடீர் கேள்வியால் கொஞ்சம் தடுமாறிய ஆட்சியரை பார்த்து மீண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “30 நிமிடங்கள் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நான் செய்தியாளர்களைச் சந்திக்கும் பொழுது வந்து கூறுங்கள்” என்று காட்டமாக கூறினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதி அமைச்சர், “ஒவ்வொரு கிலோ ரேஷன் அரிசிக்கும் 30 ரூபாயை மத்திய அரசும், 4 ரூபாயை மாநில அரசும் மானியமாக வழங்குகிறது” என்றார். மேலும், அங்கிருந்தவர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், “பிரதமர் படம் உள்ள பதாகைகளை நியாய விலைக்கடைகளில் வைக்கவேண்டும். பதாகைகள் இருப்பதை ஆட்சியராகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
முன்னதாக தெலுங்கானா மாநிலத்திற்குச் செல்லும் வழியில் நிர்மலா சீதாராமன் சென்ற வாகனத்தின் முன்பு சில காங்கிரஸ் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை காட்டினர். இந்நிலையில், மோடி படம் குறித்தும், ரேஷன் அரிசி மானியம் குறித்தும் அமைச்சர் சீதாராமனின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துவந்தது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியினர் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். மேலும், அந்த போஸ்டர்களில் ‘மோடி ஜி ரூ. 1105’ என்று அச்சடித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து, மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தியபோது, டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ், “யார் ஏற்றினார்களோ அவர்கள் தான் குறைக்க வேண்டும்” என்றதுடன் மிகக் கடுமையான சொற்களைக் கொண்டு மத்திய அரசை சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
You wanted pictures of Modi ji ,
Here you are @nsitharaman ji …@KTRTRS @pbhushan1 @isai_ @ranvijaylive @SaketGokhale pic.twitter.com/lcE4NlsRp5
— krishanKTRS (@krishanKTRS) September 3, 2022