
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை வந்த பிரதமர்களிலேயே நரேந்திர மோடிதான் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றுள்ளார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை வந்த பிரதமர்களிலேயே நரேந்திர மோடிதான் மாநிலத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றுள்ளார். பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் அவர் நிதி குறித்து அறிவிக்காமல் சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் மத்திய அரசை தொடர்ச்சியாக அனுகி புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை பெறுவோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்தபோது நேரடியாக சந்தித்து கடிதம் அளித்துள்ளோம். காவிரி நீர் விவகாரத்தில் புதுச்சேரியை பொறுத்தவரையில் தமிழகமும், கர்நாடகவாவும் குற்றவாளிகளே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் மத்திய அரசு, உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.
தொடர்ந்து வங்கிகளில் பல தொழிலதிபர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் சம்பவங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. வாராக்கடன் ஒன்பது ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகளில் நிதி மோசடி செய்தவர்கள் குறித்து பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதில் அரசியல் பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது அரசியல் பழிவாங்கும் செயல். ப.சிதம்பரம் மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. கார்த்திக் சிதம்பரம் விரைவில் நிரபராதி என தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.