மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட பெரிய காட்சிகள் அனைத்தும் சமூகவலைத்தளங்களை தங்கள் பிரச்சார களங்களாக மாற்றியுள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடி தனது வலைத்தளத்தில் காங்கிரஸ் கட்சியையும் அதன் ஆட்சியையும் விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "நீங்கள் வாக்கு அளிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும் போது கடந்த காலத்தை நினைத்து பாருங்கள். அதுவும், ஒரு குடும்பத்தின் ஆட்சி அதிகார ஆசைக்காக இந்த நாடு கொடுத்துள்ள விலையை நினைத்து பாருங்கள். புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள். ஊடகங்கள், நாடாளுமன்றம், அரசியல் சாசன சட்டம், நீதிமன்றம் என அனைத்து அரசு அமைப்புகளையும் அவமதித்தது காங்கிரஸ். நெருக்கடி நிலையை காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததே, அவர்களின் குடும்பத்தை பாதுகாக்கத்தான். அதற்காக 356 என்ற அரசியல் சாசன பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை அவர்கள் 100 முறையாவது கலைத்து இருப்பார்கள். 1947–ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் அரசில் பாதுகாப்புத்துறையில் பல ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. ராணுவத்திற்காக ஜீப் வாங்கியது தொடங்கி துப்பாக்கி, நீர்மூழ்கி கப்பல், ஹெலிகாப்டர் வாங்கியது வரை எல்லாவற்றிலும் ஊழல்தான்" என அவர் எழுதியுள்ளார்.