'அம்பன்' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்குவங்க மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'அம்பன்' புயல் மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், நேற்று மாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. நேற்று மாலை இப்புயல் கரையேறிய போது மேற்குவங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடும் மழையும் பெய்தது. மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று வீடுகள், மரங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்டவற்றைத் தூக்கிவீசியது. மேற்குவங்க கடலோரத்தில் 5 மீட்டர் உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்தன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசா மாநிலத்தில் 1.5 லட்சம் பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புயலில் 72 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மேற்குவங்க மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசியுள்ள பிரதமர் மோடி, "மேற்குவங்கத்தில் 'அம்பன்' புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை நாம் பார்த்தோம். இது நமக்குச் சவாலான நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்குவங்கத்திற்குத் துணை நிற்கும். புயல் பாதிப்பிலிருந்து மேற்குவங்க மக்கள் மீண்டு வரப் பிராத்திப்போம். நிலைமை சீரடைவதை உறுதிப்படுத்துவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.