இந்திய எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 14 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 28 ஆம் தேதியிலிருந்து ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷரா பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி மறைந்துள்ளதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இதில் ரஜோரி பகுதியில் மூன்று பயங்கரவாதிகள், மெந்தர் பகுதியில் மேலும் 10 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த 13 பயங்கரவாதிகளும் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சூழலில், மற்றொரு பயங்கரவாதி அவந்திபொராவில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைப்பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கு இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.