
உத்தரப் பிரதேசத்தில் இன்று நள்ளிரவு புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மற்றொரு லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து லாரி மூலமாக உத்தரப்பிரதேசம் வழியாகத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்துள்ளனர். இதனிடையே லாரி இன்று இரவு 3.30 மணி அளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஒரியா மாவட்டம், மிஹாலி அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதியுள்ளது. இதில் அந்த லாரியில் பயணித்த தொழிலாளர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது உயிரிழப்பது அண்மைக் காலங்களில் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஒரு வாரக் காலத்தில் மட்டுமே இதுபோன்ற விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.