மெட்ரோவிற்காக சுரங்கப்பாதை தோண்டும் பணியில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில் மெட்ரோ சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகோ பிக்கப் பிரேக் செயலிழந்ததால் சுரங்கப்பாதை கட்டுமான தளத்தில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முதற்கட்டமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. பத்துக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்து அதிகாரிகள் அங்கு செல்வதற்கே காலதாமதமானதால் மீட்புப் பணிகள் தொய்வாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 25 தொழிலாளர்கள் உள்ளே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு சூப்பர்வைசர் இல்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.