மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், மருத்துவக் கல்வியில் மத்திய அரசால் செய்யப்பட்ட வரலாற்றுச் சீர்திருத்தங்களால், 4 சுயாட்சி வாரியங்களுடன், தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, கடந்த 1956, இந்திய மருத்துவக் கல்விச் சட்டத்துக்குப் பதிலாக 2019, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2020 நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கானத் தேர்வு வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கானத் தர நிர்ணயத் தேர்வாகவும் இது நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தேசிய மருத்துவத் தொகுதி தேர்வான National Exit Test (NEXT) தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், ‘ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள முறையே தொடர வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தி இருந்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மருத்துவ மாணவர்களும் இதில் உள்ள பாதகங்களைத் தெரிவித்து அதனைக் கைவிடும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் நெக்ஸ்ட் தேர்வை நடத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன்படி ஜூலை 28 ஆம் தேதி நெக்ஸ்ட் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக நெக்ஸ்ட் செயலாளர் அறிவித்துள்ளார். நெக்ஸ்ட் தேர்வை ஒத்திவைப்பதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் இந்த முடிவால் மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.