மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் கனவுடன் மூன்றாவது அணி, மெகா கூட்டணி என பல வியூகங்களை வகுத்த உத்தரப்பிரதேசத்தின் மாயாவதி, அகிலேஷ் யாதவ் காட்சிகள் இந்த தேர்தலில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளன. இதற்கு சாதிய ரீதியிலான அரசியலே காரணம் என கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சுமார் 22 சதவீதம் உள்ள யாதவர் சமூகத்திற்கு ஆதரவான கட்சியாக கருதப்படும் அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் 22 சதவீத தலித்துகளுக்கு ஆதரவான கட்சியாக பார்க்கப்படும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. சாதிய வாக்குகளை கணக்கில் கொண்டு எதிரி கட்சிகளான இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தன.
ஆனால் இவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போல அல்லாமல், அனைத்து சமூக மக்களும் சாதி ரீதியில் வாக்குகளை அளிக்காமல் நலப்பணிகளை பார்த்து வாக்களித்தது தேர்தல் முடிவுகள் தெரியவந்துள்ளது. பாஜக அமல்படுத்திய அனைத்து வீடுகளுக்குமான மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு, தூய்மை இந்தியா மற்றும் வீடுகட்டும் திட்டங்களால் அதிக பலன் அடைந்த உ.பி.யின் கிராமப்புற மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் விடுத்து பாஜக விற்கு வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்தே இந்த தேர்தலில் 37 சதவீத வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், பாஜக 49.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக சாதிய அரசியலை மையமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட உத்தரபிரதேச அரசியலில் இந்த தேர்தல் புதியதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உத்தரபிரதேச மக்கள் சாதிய பிடிப்புகளை தகர்த்து முன்னேற்றத்தை நோக்கிய அரசியலை முன்னெடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.