இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. மேலும் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாகப் தேசிய தேர்வு முகமையின் டிஜி சுபோத் குமார் சிங் தெரிவிக்கையில், “நீட் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும். தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வு நடைபெற்ற 4 ஆயிரத்து 750 மையங்களில் 6 தேர்வு மையங்களில்தான் முறைகேடு தொடர்பாக பிரச்சனை நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி யூ.பி.எஸ்.சி. (UPSC) முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் சுமார் 1600 மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. வினாத்தாள் கசிவு எதுவும் நிகழவில்லை. நீட் தேர்வின் முழு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் “நீட் கவுன்சிலிங் தொடரும். நாங்கள் அதை நிறுத்த மாட்டோம். தேர்வு முடிந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதனால் பயப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, “நேர இழப்பை ஈடுகட்ட கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) பெற்ற 1,563 பேரின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அட்டைகளை ரத்து செய்ய குழு முடிவு எடுத்துள்ளது. 1,563 மாணவர்களுக்கான மறுதேர்வு குறித்த விவரம் இன்றே அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்படும். இதற்கான முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும். ஜூலையில் கவுன்சிலிங் தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை (NTA - என்.டி.ஏ.) அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தது.