Skip to main content

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த விவகாரம்; பாஜக நிர்வாகியின் வீட்டை இடித்து தள்ளிய அரசு

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

mathyapradesh tribal labour issue house incident

 

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின தொழிலாளி மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாஜக நிர்வாகியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

 

அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புல்டோசர் மூலம் பிரவேஷ் சுக்லா வீட்டை இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் பிரவேஷ் சுக்லா அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீட்டை கட்டியிருந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சித்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரவேஷ் சுக்லா வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லாவுக்கு மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பல பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.