98 வயதில் முதுகலை பட்டம்! லிம்காவில் இடம்பெற்ற சாதனை!!
உலகில் சாதனைகளை நிகழ்த்த வயது ஒருபோதும் தடையாக இருக்காது என்று சொல்வார்கள். அதை உண்மை என்று நிரூபித்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்த 98 வயது முதியவர் ராஜ்குமார் வைசியா.
98 வயதுமிக்க முதியவர் இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் பீகாரில் உள்ள நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரவியல் பாடப்பிரிவில் முதுகலை படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தார். தற்போது அவர் வெற்றிகரமாக தனது முதுகலை பட்டத்தைப் பெறவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1920ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்த ராஜ்குமார் வைசியா, 1938ஆம் ஆண்டு தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றுள்ளார். 1940ஆம் ஆண்டு சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்றிருக்கிறார் இவர். குடும்பச்சூழலினால் மேலும் படிக்கமுடியாத நிலையில், ராஜ்குமார் வைசியா ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணிபுரிந்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதுகலை பட்டத்திற்காக இவர் விண்ணப்பித்தபோது, உலகிலேயே முதுகலை பட்டத்திற்காக விண்ணப்பிக்கும் மிகவும் முதியவர் என்ற இவரது சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது. தன் பேரன், பேத்திகளின் வயதுள்ளவர்களுடன் தினமும் இவர் வகுப்புகளில் கலந்துகொள்வார் என நாலந்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ராஜ்குமார் வைசியா, ‘ஒருவழியாக என் நீண்டகால கனவு நிறைவேறிவிட்டது. இப்போது நான் ஒரு முதுகலை பட்டதாரி. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நான் இந்த முடிவை எடுத்தேன். கனவுகளை வெல்ல எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாலேயே என்னால் இதில் வெல்ல முடிந்தது. தேர்வுகளுக்காக அதிகாலையில் எழுந்து படித்தது மட்டுமே கடினமாக இருந்தது. மற்றபடி நான் இதை நிகழ்த்திக்காட்டிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்