கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.
அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.