திருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
விஜயவாடா: வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, மறுநாளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவர் பட்டுல்லா சந்தீப் (22). இவர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பயின்ற மாணவி போகிரெட்டி மவுனிகா(20) என்பவரைக் காதலித்தார். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று முன் தினம் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் விஜயவாடாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நண்பர்களிடம் கூறியிருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரின் சடலங்களானது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள வெட்டப்பலம் ரயில் நிலையத்திற்கு அருகே தணடவாளத்தில் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரது நண்பர்கள் தெரிவித்த தகவலின் படி, விஜயவாடாவில் இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் அன்று இரவே தாங்கள் இறக்கப் போவதாக அவர்கள் இருவரும் நண்பர்களுக்கு அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர் என்பது தெரிய வந்தது. திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் எதிர்ப்பை சமாளிக்க அஞ்சி அவர்கள் இந்த விபரீத முடிவினை எடுத்ததாகத் தெரிகிறது.