காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை 6 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமரிடமிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வனி குமார் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென புதுச்சேரி அரசு சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக அரசு மழுப்பலான முறையில் பதில் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், "திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பண பலத்தால் பாஜக ஆட்சியமைத்துள்ளது" என குற்றம்சாட்டினார். மேலும் மார்ச் மாத இறுதியில் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் வந்து புதுச்சேரியில் கப்பல் போக்குவரத்தை துவக்கி வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Published on 10/03/2018 | Edited on 10/03/2018