இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தாவும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக டெல்லிக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமும் அவர் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி வந்த மம்தா, நேற்று முன்தினம் கமல்நாத் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். அதன்பிறகு நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அதன்பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். இந்தநிலையில் இன்று, மம்தாவை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் மம்தாவுடனான தனது சந்திப்பு குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்" என தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றுபடுவோம் என்ற ஹேஷ்டேக்கையும் கனிமொழி தனது பதிவில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.