உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் அருகே உள்ள முன்ஷிகஞ்ச் சாலையில், ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் கிஷன் விஷ்வகர்மா என்பவர் தீபாவளி செலவுக்காக 5,000 ரூபாய் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணத்தில் 2 கள்ள நோட்டுகள் இருந்துள்ளது. 200 ரூபாய் நோட்டில் ‘ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா’ (RESERVE BANK OF INDIA) என்று இருக்க வேண்டிய இடத்தில் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆஃப் இந்தியா (CHILDRENS BANK OF INDIA) என்று அச்சிடப்பட்டிருந்தது. மற்றொரு 200 ரூபாய் நோட்டில் ஃபுல் ஆஃப் ஃபன் (FULL OF FUN) என்ற வாக்கியம் இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிஷன் விஷ்வகர்மா, அருகில் இருந்தவர்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. மேலும், அந்த 200 ரூபாய் கள்ள நோட்டுகளை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஏடிஎம்மில் கள்ள நோட்டு வந்த விவகாரத்தை கிஷன் விஷ்வகர்மாவும் அங்கிருந்தவர்களும் போலீசாரிடம் விவரித்துள்ளனர். இதனையடுத்து, கள்ளநோட்டு சம்பந்தப்பட்ட வங்கியிடம் விசாரணை செய்யப்படும் என்றும் தீபாவளி விடுமுறை முடிந்து வங்கிகள் திறக்கப்படும்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அதன் பிறகு, அந்த ஏடிஎம்மில் பணம் எடுத்த கிஷன் விஷ்வகர்மா பேசும்போது “ இந்த ஏடிஎம் இயந்திரம் ‘இந்தியா 1’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த ஏடிஎம்-மில் பணம் எடுத்த மற்றொரு நபருக்கும் கள்ள நோட்டுதான் வந்தது. இந்த சம்பவத்தில் தற்போது வரை வழக்குப்பதிவு செய்யவில்லை.” என கிஷன் விஷ்வகர்மா தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.