இந்தியாவில் கரோனாவின் இரண்டு அலைகளிலும் அதிகம் பாதித்த மாநிலமாக மஹாராஷ்ட்ரா இருந்துவருகிறது. கரோனா இரண்டாவது அலையின்போது தினசரி கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியாகிவந்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்ததையொட்டி, மஹாராஷ்ட்ரா சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளை 7 மணியிலிருந்து 12 மணிவரை திறக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கடைகளை மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பணியில் நேரடியாக ஈடுபடாத அரசு அலுவலகங்கள் 25 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களை அனுமதிப்பது குறித்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும் என மஹாராஷ்ட்ரா அரசு கூறியுள்ளது. வணிக வளாகங்களாக இன்றி, தனியாக இருக்கும் அத்யாவசியமற்ற பொருட்களுக்கான கடைகளைத் திறப்பது குறித்தும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை வாரியம் முடிவு செய்யுமென்றும், அப்படி அவை திறக்கப்பட்டாலும் மதியம் 2 மணிக்குமேலும், வார இறுதி நாட்களிலும் திறக்கப்படக்கூடாது என்றும் மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.