2025 ஆண்டு வாக்கில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக்கே அதிகமாக இருக்கும். இப்படித் தான் புள்ளி விபரங்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கின்றன. இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் நெகிலிப் பைகள், தேநீர் கோப்பைகள், நெகிலி தட்டுக்கள். பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்த பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்தாலும், இந்த நிமிடம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நாளைய தலைமுறை எக்கேடு கெட்டால் நமக்கு என்ன? என்று நாம் இருக்கிறோம். ஆனால், கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள சோம்பலா என்ற கிராமத்தை சேர்ந்த பிரயேஷ், இதுவரை 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து அகற்றி இருக்கிறார். அவரது இந்த முயற்சிக்கு, நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.
“கடற்கரையில் தான் அதிகமான குப்பைகள் இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கடலின் ஆழமான பகுதிகளில் கூட குப்பைகளை காண முடிகிறது. படகுகளில் செல்லும் பயணிகள் அல்லது சுற்றுலாவாசிகள் மட்டும் இதற்கு காரணமல்ல. தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை கடலுக்குள் தூக்கியெறியும் மீனவர்களும் இதற்கு பொறுப்பாவர்கள்” என்கிறார் பிரயேஷ்.
சில சமயங்களில் அக்கம் பக்கத்தினரின் கேலிப் பேச்சும் மக்களின் அக்கறையின்மையும் அவரை பாதித்தாலும், தனது முயற்சியில் தளராமல் இருக்கிறார் பிரயேஷ். தான் செய்வதை பார்த்து யாராவது ஒரு நபர் உத்வேகம் அடைந்து அவரது பகுதிகளில் இதை செயல்படுத்தினால், இது ஒரு சங்கிலித் தொடராக ஆரம்பமாகும் என நினைத்தார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப அருகே உள்ள ஆழியூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் பிரயேஷுடன் இணைந்து இப்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் இதுவரை கடலில் இருந்து 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.
"மீன் வலையில் 50 கிலோ மீன் சிக்குகிறது என்றால், அதில் 13 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளே இருக்கும். இதன் மூலம் எந்தளவிற்கு கடலில் பிளாஸ்டிக் மிதக்கிறது என்பதையும், இனிவரும் தலைமுறை மீன் பிடிக்கமாட்டார்கள் பிளாஸ்டிக்கை தான் பிடிப்பார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்று எச்சரிக்கிறார் பிரயேஷ்.