கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இதற்கிடையில், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மணிப்பூரின் ஜிரிபம் என்ற பகுதிக்குச் செல்லவிருந்த நேரத்தில் அவர் பயணித்த கான்வாய் வாகனத்தின் மீது கடந்த 10ஆம் தேதி ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் வீரர் என இருவர் காயமடைந்தனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குக்கி இன போராளிகள் மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது. அங்கு கலவரம் நடக்கவில்லை என்று பா.ஜ.கவினர் கூறி வந்தாலும் அவ்வப்போது சில இடங்களில் இது போன்று தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், இம்பாலில் உள்ள குமான் லாம்பக் இன்டோர் ஹாலில் சர்வதேச யோகா தின 2024 விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வன்முறை எல்லா இடங்களிலும் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் அது குறைந்துள்ளது. இருப்பினும், சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் பள்ளிகள், அரசு நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்படுகின்றன. இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறியாகும்.
மோடி 3.0 அரசாங்கம் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீண்டும் கொண்டு வர முன்னுரிமையாக சேர்த்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து ஏஜென்சிகளுடனும் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை மேற்கொண்டுள்ளார். மணிப்பூர் அமைதியின்மைக்கு தீர்வு காண 2-3 மாதங்களுக்குள் ஒரு செயல் திட்டம் நிச்சயமாக வரும்” என்று கூறினார்.