டாக்ஸில் சென்ற போது பெண்ணிடம் இளைஞர் ஒருவர் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி, கல்லூரியில் இருந்து கிராண்ட் சாலை செல்லும் வழியில் ஷேர் டாக்ஸி ஒன்றில் ஏறியுள்ளார். ஷேர் டாக்ஸி என்பதால், அதில் ஏற்கனவே இளைஞர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் கல்லூரி மாணவியும் ஷேர் டாக்ஸியில் ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் டாக்ஸி சிறிது தூரம் சென்ற உடன் அந்த இளைஞர் கல்லூரி மாணவியை பார்த்து ஆடையைக் கழற்றி முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனிடையே மாணவி இளைஞரின் செயலை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வெளியான நிலையில் இளைஞரின் செயலுக்கு இணைய வாசிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே வீடியோவை வெளியிட்ட நபர், பொது இடத்தில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதோடு, மும்பை போலீசாரை நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள மும்பை போலீஸ், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வீடியோ சார்ந்து வேறு ஏதும் ஆதாரம் இருந்தால் வழங்குங்கள் என்றும் கேட்டுள்ளது.
பட்டப்பகலில் அதுவும் பொது இடத்தில் கல்லூரி மாணவியிடம் இளைஞரின் அநாகரிக செயல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.