மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக நாடியா மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகரில் மாநில அரசின் நிர்வாக கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கூட்டத்தின் நடுவே தனது கட்சி எம்.பியான மஹுவா மொய்த்ராவை உட்கட்சி பூசல் தொடர்பாக கண்டித்துள்ளார்.
கூட்டத்தின் நடுவே மம்தா, "மஹுவா, தெளிவாக ஒன்றை கூறுகிறேன். யார் யாருக்கு எதிராக இருக்கிறார்கள் என பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் தேர்தல் வரும்போது யார் போட்டியிடுவது, யார் போட்டியிடப்போவதில்லை என்பதை கட்சிதான் முடிவு செய்யும். எனவே, இங்கு கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. ஒருநபர் என்றென்றும் அதே பதவியில் இருப்பார் என்று கற்பனை செய்ய எந்த காரணமும் இல்லை" என்றார்.
மஹுவா மொய்த்ரா அண்மையில் திரிணாமூல் காங்கிரஸின் நாடியா மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.