தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், தனிநபர் தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மசோதாவை வடிவமைத்த குழுவின் தலைவரான நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா, இந்த மசோதா ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "தனியுரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டே இந்த மசோதாவை நாங்கள் உருவாக்கினோம். ஆனால், மத்திய அரசு அந்த மசோதாவில் மாற்றங்களை செய்திருக்கிறது.
மத்திய அரசின் நிறுவனங்கள் தனிநபர் தகவல்களை பெறுவதற்கு, நாங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தோம். அந்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதன் மூலமாக, இறையாண்மை என்ற பெயரில் எந்தவொரு நபரின் அல்லது நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல்களையும் மத்திய அரசால் பெற்றுக் கொள்ள முடியும். இதனை அனுமதித்தால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்" என கூறியுள்ளார்.