இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு நேற்று (05.05.2024) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன் 14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகிறது. முறைகேடுகளைத் தடுக்க நீட் தேர்வில் மாணவர்களுக்கு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ. 20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் என நாடு முழுவதும் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளுக்குச் செய்யும் துரோகம் ஆகும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகி விட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கையாலாகாத்தனத்தை தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக் கொண்டு விலை கொடுத்துக் கொண்டிருக்கும் இளைஞரும் அவரது குடும்பத்தினரும் இப்போது பேசுவதற்கும் ஆட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான சூழல் அமைத்து தருவதே எங்கள் உத்தரவாதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.