ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார். இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இருந்தும் பல்வேறு தலைவர்கள் இந்த விபத்து சம்பவத்திற்கு தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விபத்து குறித்து தெரிவிக்கையில், "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. இருப்பினும் தற்போது மீட்புப் பணியில் ஈடுபடுவதும், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்களுடன் இருப்பதே முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.