தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைக் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பா.ஜ.கவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று இன்று (03-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பிரதமர் மோடியும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 70 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். நாங்கள் 70 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமராக ஆகியிருக்க முடியாது.
அதே போல், அமித்ஷா உள்துறை அமைச்சராக ஆகி இருக்க முடியாது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாத்தவர்கள் நாங்கள். அதனால், தான் நீங்கள் தற்போது இத்தகைய பதவிகளில் அமர முடிகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்தியில் உள்ள மோடி அரசு துன்புறுத்துகிறது. சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்துக்காக மோடியும், அமித்ஷாவும் பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்” என்று கூறினார்.