இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மாதம் 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ராகுல் காந்தி ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் வேளாண் சட்ட போராட்டம், பெகாசஸ் என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக தாக்கினார். மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரை வருமாறு; (இந்திய) குடியரசின் எஜமானர்கள், எவ்வாறு நிகழ்காலத்தில் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை பெகாசஸ் விவகாரம் துல்லியமாக விளக்கியுள்ளது. சொந்த குடிமக்களை உளவு பார்ப்பதற்கு மக்களின் வரிப்பணத்தில் ஒரு தொழில்நுட்பத்தை வாங்கியது என அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. (உங்களை பொறுத்தவரை) நியூயார்க் டைம்ஸ் பொய் சொல்கிறது, தி வயர் பொய் சொல்கிறது, அம்னெஸ்டி பொய் சொல்கிறது, பிரெஞ்சு அரசாங்கம் பொய் சொல்கிறது, ஜெர்மன் அரசாங்கம் பொய் சொல்கிறது, அமெரிக்க அரசாங்கம் பொய் சொல்கிறது. என்.எஸ்.ஓ மீது வழக்குத் தொடுத்த வாட்ஸ்அப் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பொய் சொல்கின்றன. இந்த அரசாங்கம் மட்டுமே பெகாசஸ் பற்றி உண்மையை கூறி தனித்துவமாக திகழ்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைக் கூட அரசாங்கம் தவறாக வழிநடத்தியுள்ளது.
ஜனாதிபதியின் உரை பலமுறை நேதாஜியை குறிப்பிடுகிறது. இந்திய அரசு அனைத்து மதங்கள் மீதும் நடுநிலையையும் பாரப்பட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது அதே நேதாஜிதான் என்பதை இந்தக் குடியரசுக்கு நினைவுபடுத்துகிறேன். முஸ்லீம் இனப்படுகொலைக்கான இரத்தத்தை உறைய வைக்கும் அறைகூவலை விடுத்த ஹரித்வார் தரம் சன்சாத் போன்ற ஒன்றை நேதாஜி அங்கீகரித்திருப்பாரா?. இந்த அரசாங்கம் வரலாற்றை மாற்ற விரும்புகிறது. அரசு எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகிறது. அவர்கள் நிகழ்காலத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில், இந்தியாவிற்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசுகிறார். ஆனால் இதுவெறும் உதட்டளவில் மட்டுமே உள்ளது. இந்த அரசாங்கம் மிகவும் பாதுகாப்பற்றதாக தன்னை உணர்கிறது. அது சுப்பிரமணிய பாரதி, வி.ஆர்.பிள்ளை, ஸ்ரீ நாராயண குரு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியாரை பற்றிய அலங்கார ஊர்தியை அனுமதிக்காத விஷயத்திலேயே பிரதிபலிக்கிறது. அரசாங்கம் சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மீள்உருவாக்கம் செய்ய முயல்கிறது. ஆனால் நம் நாட்டின் உண்மையான கதாநாயர்களை கண்டு அஞ்சுகிறது.
நீங்கள் (அரசாங்கம்) எங்கள் வீட்டிற்குள் நுழைய விரும்புகிறீர்கள். நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், என்ன உடுத்துகிறோம் என்பதில் தலையிட விரும்புகிறீர்கள். தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனை நடத்த அரசு அமைப்புகளை பயன்படுத்த முடியாமல் போகலாம் என்ற எதிர்காலத்தை குறித்த பயத்தால் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவி காலத்தை நீங்கள் நீட்டிக்கீறிர்கள். மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை மத்திய அரசால் கொடுமைப்படுத்த முடியாத எதிர்காலத்தை கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள், எனவே நீங்கள் ஐஏஎஸ் கேடர் விதியை திருத்துகிறீர்கள். நமது குடியரசின் ஆன்மா மீது அவநம்பிக்கை கொண்டுள்ளீர்கள். அதனால்தான் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைக்க விரும்புகிறீர்கள். உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை இழக்க செய்யும் சாத்தியங்களை உருவாக்குகிறீர்கள் .உத்தரப்பிரதேசத்தில் 70 இடங்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டது. ஜாட்கள் மீதும் சீக்கியர்கள் மீதும் உங்களுக்கு ஆதரவாக நிற்கும் அனைவர் மீதும் நீங்கள் அவநம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தேர்தல் நெருங்கியுள்ளதால் வெட்கமின்றி (சீக்கியர்களின்) தலைப்பாகை அணிகிறீர்கள். 80 சதவீதத்துக்கும் 20 சதவீதத்துக்கும் இடையே அரசு தொடங்கிய போர், நமது புனித குடியரசை 100 சதவீதம் அழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மஹுவா மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றினார். மஹுவா மொய்த்ரா உரையின்போது, அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த பாஜக எம்பி ரமா தேவி 5 முறை குறுக்கிட்டார். மேலும் ஆத்திரப்படாமல் பேசுமாறும் மஹுவா மொய்த்ராவை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மஹுவா மொய்த்ரா, தனது கோபம் உள்ளிருந்து வருவதாக கூறி பேச்சை தொடர்ந்தார். இதன்பின்னர் மஹுவா மொய்த்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த எம்.பி-யை ரமா தேவி பேச அழைத்தார். இதற்கு மஹுவா மொய்த்ரா, கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களவை சபாநாயகர் எனக்கு குறைந்தபட்சம் 13 நிமிடங்களை ஒதுக்கினார், அவரது அறைக்கு சென்று இதுதொடர்பாக கேட்டபோது, அவர், நான் (சபாநாயகர்) இருக்கையில் இல்லை எனவே குற்றம் சொல்ல முடியாது என்றார். மேலும் அவரை தொண்டி துருவியபோது, 13 நிமிடங்கள் உனக்கு ஒதுக்கியதே பெருந்தன்மை என கூறினார். இது நம்பமுடியாது" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தனது மற்றொரு ட்விட்டில், "நான் கோபமாக பேச வேண்டுமா, அன்பாக பேச வேண்டுமா என எனது மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொண்டு, குறுக்கீட்டு பாடம் நடத்த சபாநாயர் யார்? அது உங்கள் வேலை இல்லை மேடம். நீங்கள் விதிகளின் கீழ் மட்டுமே என்னை திருத்த முடியும். நீங்கள் மக்களவையின் நீதி நெறி ஆசிரியர் அல்ல" எனவும் பாஜக எம்பி ரமா தேவியை விமர்சித்துள்ளார்.