மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா - பா.ஜ.க - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அம்மாநிலத்தில் முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், அம்மாநில தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் இருந்து 3 எம்.எல்.ஏக்கள் குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், தங்கர் இனப்பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தங்கர் சமூகம் தற்போது, அம்மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இருக்கிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர், தங்களை பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கக் கோரி பந்தர்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் ஆகியோர் தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்து குதித்துள்ளனர். நல்வாய்ப்பாக, தற்கொலை முயற்சிகளைத் தடுப்பதற்காக 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வலையில் அவர்கள் விழுந்ததால் அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர். வலையில் விழுந்த அவர்களை, அங்கிருந்த மீட்புக்குழு பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ, வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.