ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகுவதாகவும், அவருக்குப் பதில், அவரது மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா அப்பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷிவ் நாடார், இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்போது நிர்வாகம் சாரா இயக்குநராக இருந்துவரும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, ஜூலை 17, 2020 முதல் இயக்குநர்கள் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷிவ் நாடார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை மூலோபாய அதிகாரியாகவும் பொறுப்பில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதான ஷிவ் நாடார், அஜய் சவுத்ரி, அர்ஜுன் மல்ஹோத்ரா உள்ளிட்ட எட்டு பேருடன் இணைந்து நிறுவிய இந்நிறுவனம் இன்றைய தொழில்நுட்ப உலகின் மிகமுக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. 38 வயதாகும் ரோஷினி மல்ஹோத்ரா 2019 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 54ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.