மஹாராஷ்ட்ர சட்டசபை வரும் ஏழாம் தேதி கூட உள்ள நிலையில், சபாநாயகர் நானா படோலேக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மஹாராஷ்ட்ராவில் வரும் ஏழாம் தேதி மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் கூடுகிறது. கரோனா பரவல் காரணமாக இதுவரை இரண்டுமுறை இந்த கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு நாட்களில் முடிவடையும் வகையில் இந்த மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டசபை தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் சபாநாயகர் நானா படோலேக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் வழிநடத்த மாட்டார் என்றும், துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் கூட்டத்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆன்டிஜன் முறையில் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கரோனா இல்லாத எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபைக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.