
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்தததால் பலியானவர்கள் எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள மான்பூர் பிருத்வி, பஹாவலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர், போலி மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர்களில் 12 பேர் நேற்று (12/01/2021) உயிரிழந்தனர். மேலும், 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்த போலீஸார், ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலி மதுபானம் வேறு எங்கெங்கு விற்கப்படுகிறது என விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (13/01/2021) நடைபெற்றது.
இந்தச் சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று பேசுகையில், இந்த போலி மதுபான சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததோடு, அந்த கிராமங்கள் இருக்கும் மோரேனா மாவட்டத்தின் கலால் அதிகாரி பதவிநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.