Skip to main content

“அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட்.. அவரை விடுவிக்க வேண்டும்” - ம.பி. வழக்கில் திருப்பம்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

madhya pradesh viral issue affected tribal people incident  change case

 

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின தொழிலாளி மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாஜக நிர்வாகியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

 

அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புல்டோசர் மூலம் பிரவேஷ் சுக்லா வீட்டை இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

 

இதனிடையே பிரவேஷ் சுக்லா அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீட்டை கட்டியிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து சித்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரவேஷ் சுக்லா வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லாவுக்கு மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பல பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தனது வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தார். அப்போது, “அந்த வீடியோவை பார்த்து எனக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தவரின் காலைக் கழுவிய முதல்வர்!

 

madhya pradesh viral issue affected tribal people incident  change case
கோப்பு படம் 

 

இந்நிலையில் இச்சம்பவத்தில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத் தெரிவிக்கையில், “இந்த சம்பவத்தில் தவறு நடந்துவிட்டது. நான் அரசிடம் பிரவேஷ் சுக்லாவை விடுவிக்கக் கேட்டுக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட். பிரவேஷ் சுக்லா தன் தவறை உணர்ந்துவிட்டார்” என மத்தியப்பிரதேச அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்