காலம்காலமாக சேவல் காலையில் கூவிய பிறகு மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து தங்களது அன்றாட வேலைகளை செய்ய தொடங்குகின்றனர். கடிகாரங்கள் இல்லாத காலத்தில், மக்களை காலையில் எழுப்பும் அலாரமாக சேவல் இருந்திருக்கிறது. என்னதான் நகரத்தில் வாழும் மக்கள் கடிகாரத்தில் அடிக்கும் அலாரத்தை பார்த்து தூக்கத்தில் இருந்து எழத் தொடங்கிவிட்டாலும், கிராமங்களில் சேவல் கூவிய பிறகே எழும் நடைமுறையை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படியாக மனித வாழ்வில் பிணைந்து இருக்கும் சேவல் மற்றும் சேவலின் கூவல் மீதே ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருபவர் மருத்துவர் அலோக் மோடி. இவர் தினமும் இரவில் பணிக்குச் சென்று விட்டு காலையில் வீட்டிற்கு வந்து தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இவர் காலையில் வீட்டில் தூங்கும்போது பக்கத்து வீட்டில் இருக்கும் சேவல் கூவுவது, அலோக் மோடிக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது. இதனால் தினமும் இரவுப்பணியை முடித்துவிட்டு காலையில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அலோக் மோடி, சேவல் மீது பலாசியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “என்னுடைய பக்கத்து வீட்டில் பெண் ஒருவர் சேவல், கோழி உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அதில் அவர் வளர்த்து வரும் சேவல் தினமும் காலை 5 மணிக்கு கூவுவதால் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு வந்து காலையில் தூங்கலாம் என்று பார்த்தால் இந்த சேவல்கள் என்னுடைய தூக்கத்தையே கெடுத்து விடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பலாசியா காவல்நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது, “முதலில் இரு தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் சுமூக முடிவு எட்டாவிட்டால், சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.