"நம்பிக்கை அதுதானே எல்லாம்" என்னும் வாக்கியம் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது பிரபுவும் 'கல்யாண்' ஜூவல்லர்ஸும். அந்த 'கல்யாண்' ஜூவல்லர்ஸின் சமீபத்திய விளம்பரம் அந்நிறுவனத்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்பொழுதும் 'கல்யாண்' ஜூவல்லர்ஸ் 'நம்பிக்கை' என்னும் மையக் கருத்தைக் கொண்டுதான் தனது விளம்பரங்களை வடிவமைக்கும். கல்யாண் ஜூவல்லர்ஸ், 'லண்டனை' தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் 'எல்&கே சாட்சி & சாட்சி' என்னும் விளம்பர நிறுவனம் மூலம்தான் தனது விளம்பரங்களை வடிவமைத்து வருகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸின் சமீபத்திய விளம்பரத்தில் வங்கி ஊழியர்கள் அலட்சியமாய் நடந்து கொள்வது போல் சித்தரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கிக்கு பிரபு தனது பேத்தியுடன் சென்று, தனது வாங்கிக்கணக்குக்கு பென்ஷன் பணம் இரு முறை வந்திருப்பதைச் சுட்டிக்காட்ட வங்கி மேலாளர் "யாருக்குத் தெரியப் போகுது, கண்டுக்காதீங்க, நீங்களே வச்சுக்கங்க. இது பெரிய வேலை " என்றதும் பிரபு "யாருக்குத் தெரியாட்டியும் எனக்குத் தெரியும், தப்பு தப்புதான்" என்று உறுதியுடன் கூற அந்த வங்கி மேலாளர் அதற்கான வேலையை செய்வது போல அந்த விளம்பரம் முடியம்.
இதே விளம்பரம் ஹிந்தியில் அமிதாப் பச்சனும் அவரது மகள் ஸ்வேதா பச்சனும் நடிக்க படமாக்கப்பட்டிருந்தது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இதை பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் கண்டித்தன. கல்யாண் நிறுவனம் மீது வழக்கு தொடுப்போமென்றும் எச்சரித்தன. இந்நிலையில் தற்போது அந்த விளம்பரம் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனரான ரமேஷ் கல்யாணராமன், "நமது தற்போதைய விளம்பரம் மதிப்பிற்குரிய வங்கி ஊழியர் சமூகத்தைக் காயப்படுத்தியுள்ளது. அந்த விளம்பரம் எந்த உள்நோக்கத்துடனும் வரையறுக்கப் படவில்லை, அது வெறும் கற்பனை அடிப்படையில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது, மற்றபடி வங்கி ஊழியர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் காட்சிப்படுத்தியது இல்லை. மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நாங்களும் வங்கி ஊழியர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை ஒப்புக்கொள்கிறோம்" என்று கூறினார். ஆனால், அதன் தமிழ் வடிவம் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.