லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வரும் வியாழக்கிழமை முதல் இவ்வங்கியின் பங்குகள் வர்த்தக சந்தையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் வங்கியான, 'லட்சுமி விலாஸ் பேங்க்' தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மருந்து நிறுவனம் ஒன்று ரூ.726 கோடி கடன் வாங்கி இருந்தது. இதுபோலவே வேறு சில நிறுவனங்களும் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்றிருந்தது. அந்த நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் லட்சுமி விலாஸ் பேங்க் மிகவும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், வங்கியின் தினசரி பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. இதனால், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி, மத்திய நிதி அமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கிக்கு, சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி டிசம்பர் 16 -ஆம் தேதி வரை, தனிநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமிவிலாஸ் வங்கியில் வாராக்கடன் அளவு அதிகரித்ததாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக மற்ற நிதி நிறுவனங்களுடன் வங்கியை இணைக்கும் அதன் திட்டம் தோல்வியடைந்ததாலும், வங்கியின் நிதிநிலையைச் சீர்செய்யும் பொருட்டு அவ்வங்கியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கியைச் சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2500 கோடி ரூபாயை டிபிஎஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியில் செலுத்த உள்ளது. இதற்கு பதிலாக, லட்சுமி விலாஸின் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறைக்கடன்களில் 1.6 பில்லியன் டாலரின் உரிமையை டிபிஎஸ் வங்கி பெற்றுக்கொள்ள உள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் வர்த்தக சந்தையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.