புதுச்சேரி, திருபுவனை அருகேயுள்ள சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(49). இவருக்கும் மயில் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மயில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இதனையடுத்து அம்பிகா என்பவரை நாகராஜ் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவருக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
இதில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மூத்த மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இரண்டாவது மகள், திருவண்டார்கோயில் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகளான கீர்த்தனா (18) கலிதீர்த்தான்குப்பத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். மற்றொரு பெண் பிள்ளையும், ஆண் பிள்ளையும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நாகராஜனின் முதல் மனைவி இறந்த மயிலின் தம்பி மகனான ரத்தினவேல் மகன் முகேஷ் (22), கலித்தீர்த்தான்குப்பத்தில் படிக்கும் கீர்த்தனா என்பவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு கீர்த்தனா மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் கீர்த்தனாவிடம் தகராறு செய்து, 'என்னை தவிர வேறு யாரிடமும் பேசினால் கொலை செய்து விடுவேன்' என்று அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 5:15 மணியளவில் கீர்த்தனா தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ், கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்ததும் முகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்தத்துடன் விழுந்து கிடந்த கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், கீர்த்தனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரவேல் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரு தலை காதலால் நடந்த கொலையால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. இதில் கொலையாளியாக கருதப்படும் முகேஷ் மீது ஏற்கனவே திருவண்டார்கோயில் பகுதியில் உள்ள ரீகன் மதுபான கடையில் குண்டு வீசிய வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.