Skip to main content

“ராகுலின் தகுதி நீக்கத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும்” - ப. சிதம்பரம்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Lok Sabha Speaker should immediately withdraw Rahul's disqualification says P Chidambaram

 

ராகுல்காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இழந்த தனது எம்.பி பதவியை திரும்பப்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. 

 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம், “கடந்த 162 ஆண்டுகளில், அவதூறு வழக்கிற்கு 2 ஆண்டுகள் தண்டனை என்ற உச்சபட்ச தீர்ப்பை இதுவரை எந்த நீதிமன்றமும் வழங்கியதாகத் தெரியவில்லை; நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை விலக்கி வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த வழக்கு உருவாக்கப்பட்டது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களைவை சபாநாயகர் உடனடியாக திரும்பப் பெறவேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்