உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்கும் 'Accenture'- க்கு அடுத்ததாக டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாம் இடத்தில் இருந்த ஐ.பி.எம். நிறுவனத்தை நான்காம் இடத்திற்கு தள்ளி நாட்டின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களைத் தரப்படுத்துவதில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் பிராண்ட் பைனான்ஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், 'Accenture' நிறுவனம் உலகில் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் வலிமையான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் உள்ள 'Accenture' நிறுவனத்தின் 2022- ஆம் ஆண்டின் பிராண்ட் மதிப்பு 36.19 பில்லியன் டாலர்களாகவும், இரண்டாம் இடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 16.78 பில்லியன் டாலர்களாகவும், மூன்றாம் இடத்தில் உள்ள இன்போசிஸின் பாதிப்பு 12.77 பில்லியன் டாலர்களாகவும் உள்ளனர்.
கடந்த ஆண்டைவிட 34 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதன் காரணமாக, நான்காம் இடத்திற்கு தள்ளப்படுள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு, 10.58 பில்லியன் டாலர்களாக உள்ளது. உலக அளவில் முதல் 25 இடங்களில் டிசிஎஸ், இன்போசிஸிஸ் தவிர மேலும் நான்கு இந்திய நிறுவனங்களும் உள்ளன.
7- வது இடத்தில் விப்ரோ நிறுவனமும், 8- வது இடத்தில் ஹெச்.சி.எல். நிறுவனமும், 15- வது இடத்தில் டெக் மகிந்திராவும், 22- வது இடத்தில் எல்&டி இன்போடெக் நிறுவனமும் உள்ளது.
உலக பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பிராண்ட் பைனான்ஸ் (Brand Finance) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.