உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மதுக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் இருந்தே மக்கள் மதுபானக்கடைக்கு குவிந்து வருகிறார்கள். மேலும் ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் தங்களுக்கான மதுமானத்தை வாங்கிச் செல்கிறார்கள்.